Thursday 6 November 2014

VAIRAMUTHU vin vaira varigal

THE BEST OF VAIRAMUTHU,NO OTHER SUBSTITUTE
மெளனத்தில் புதைந்த கவிதைகள்.

கம்மாக் கரையோரம்
களையெடுக்கும் வேளையில
கறுப்புக் கொடபுடிச்சுக்
கரைவழியே போனீரு

அப்ப நிமிந்தவதான்
அப்புறமாக் குனியலையே
கொடக்கம்பி போலமனம்
குத்திட்டு நிக்கிறதே

நீர்போனபின்னும் ஒம்ம
நெழல்மட்டும் போகலையே
நெஞ்சுக்குழியில் ஒம்ம
நெழல்வந்து விழுந்திருச்சே

வண்ண மணியாரம்
வலதுகையிக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கிவைக்கும் அதிகாரம்

போறபோக்கில் ஒரு
புஞ்சிரிப்பால் உசுர்கசக்கி
வேரோட பிடுங்கிஎன்ன
வெயில்தரையில் போட்டீரே

வெல்லப் பார்வைஒண்ணு
வீசிவிட்டீர் முன்னாடி
தாங்காத மனசுஇப்பத்
தண்ணிபட்ட கண்ணாடி

* * * * *
பச்சி ஒறங்கிருச்சு
பால், தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து
எலகூடத் தூங்கிருச்சு

காசநோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரநிமிசம் தூங்கலையே

ஒறங்காத கண்ணுறங்க
உபாயம் ஒண்ணு உள்ளதய்யா
அழகா! நான் ஒறங்கஒம்ம
அழுக்குவேட்டி தாருமய்யா

* * * * *

குத்துதய்யா கொடையுதய்யா
குறுகுறுன்னு வருகுதய்யா
சூறாவளி புகுந்து
சுத்துதய்யா தலக்குள்ள

தைலந்தான் தேச்சேன்
தலவலியோ தீரலையே
நொச்சிஎல வச்சேன்
நோய்விட்டுப் போகலையே

தீராத தலவலியும்
தீரவழி உள்ளதய்யா
நீவச்ச தலையணைய
நான்வச்சாத் தீருமய்யா

* * * * *
ஒருவாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் எறங்கலையே

ஆத்து மீன்கொழம்பு
அடுப்பில் கொதிக்கையில
ஏழுதெரு மணக்கும்
எனக்குமட்டும் மணக்கலையே

சோறுதண்ணி கொள்ளஒரு
சுருக்குவழி உள்ளதய்யா
எங்கஞ்சி நீர்வந்து
எச்சில்வச்சுத் தாருமய்யா

* * * * *
உள்நெஞ்சுக்குள்ள
ஒம்மநான் முடிஞ்சிருக்க
எங்கே எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

தவிப்புக்கு ஒருத்தன்
தாலிக்கு வேறொருத்தன்
எத்தனையோ பெண்தலையில்
இப்படித்தான் எழுதிருக்கோ?

ஏழப் பொம்பளைக
எதுவும்சொல்ல முடியாது
ரப்பர் வளவிக்குச்
சத்தமிட வாயேது?
----------------------------------------------------------------------------------------VAIRAMUTHU

No comments: